“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க் வினவியுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து ரோஷன் பெய்க் நேற்று நீக்கப்பட்டார். அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அம்மாநில கட்சியின் தலைவர்கள் அனுப்பிய பரிந்துரையின் பேரில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தனது நீக்கம் குறித்து ரோஷன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நான் காங்கிரஸ் கட்சியின் நேர்மையான தொண்டன். நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஒன்றும் கூறவில்லை. நான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தே கருத்து தெரிவித்தேன். நான் அவர்களை பற்றி கூறியது உண்மையாகும். உண்மையை கூறியது ஒரு குற்றமா?
மேலும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதேபோல கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற படு தோல்விக்கு கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் ஏன் எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாக்கபடவில்லை என்றுதான் நான் கேட்டேன். அத்துடன் நமது கட்சி தலைவர்களே கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளனர். குறிப்பாக மாண்டியா தொகுதியில் சுமலதாவிற்கு நமது கட்சி தலைவர்கள் நேரடியாக வேலை பார்த்தனர். நமது கட்சி தலைவர்கள் மீது லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தையே நான் கூறினேன்” எனத் தெரிவித்தார்.