இந்தியா

டிக்கெட் 'கன்பாஃர்ம்' ஆகுமா ஆகாதா ? விடை சொல்லும் ஐஆர்சிடிசி இணையதளம் !

பஸ் டிக்கெட் அதிகமானதால் தொலைத் தூர பயணங்களுக்கு நடுத்தர வர்கத்தினர் பெரிதும் நம்பி இருப்பது ரயில் பயணத்தை மட்டும்தான். ஆனால், இப்போதெல்லாம் ரயிலில் டிக்கெட் கிடைப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஒரு ஊருக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் குறைந்தப்பட்சம் 3 மாதம் முன்பே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் சில நேரம் உறுதிச் செய்யப்படும் அல்லது காத்திருப்பு பட்டியலில் இருக்கும் அல்லது டிக்கெட் கிடைக்காது. நாம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் கன்பாஃர்ம் ஆகுமா ஆகாதா என்ற குழப்பம் ஒவ்வொரு பயணியிடமும் இருக்கும். இதனால், பயணிகள் திட்டமிட்ட சில வேலைகள் டிக்கெட் குழுப்பத்தால் தள்ளிப் போகும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்பதற்காகவே, ஐஆர்சிடிசி இணையதளம் இப்போது புதிய வடிவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின்படி, காத்திருப்போர் பட்டியலில் ஒருவர் இருந்தால்,அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசி நிலைக்கு வருமா என்பதை ஐஆர்சிடிசி-யின் புதிய சேவை பயணிகளுக்கு தெரிவிக்கும். இதன் மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்குப் பயணத்துக்கான டிக்கெட்  உறுதியாகுமா என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். இதன் மூலம் பயணிகளின் கடைசி நேர பரபரப்பு தவிர்க்கப்படும். ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கணித்துக் கூறும் சேவையை, மத்திய ரயில்வே தகவல் முறை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசியில் வருமா என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: www.irctc.co.in