இந்தியா

தெலுங்கானா: நாவில் நீர் ஊறச்செய்யும் பிரியாணி ரகங்கள்.. ஈரான் தூதரகத்தின் உணவுத்திருவிழா

நிவேதா ஜெகராஜா

தெலுங்கானாவில் ஈரான் நாட்டின் சார்பில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவடையும் இந்த உணவுத் திருவிழாவில் ஈரான் நாட்டின் சைவ, அசைவ உணவு ரகங்கள் காண வருவோரின் நாவில் நீர் ஊறச் செய்வதுடன் மணமும் மூக்கைத் துளைக்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் சந்தோஷத்துக்காகவும் சாப்பிடும் உணவு, நிறைய பேருக்கு பிடித்தமானது பிரியாணி. பெருநகரங்களிலெல்லாம் தெருவுக்கு நிச்சயமாக ஒரு பிரியாணி கடையையாவது நாம் பார்த்துவிட முடியும். சென்னையில் மட்டும் 40 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பிரியாணி கடைகள் உள்ளன. ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் மட்டும் 40 பிரியாணி கடைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டை விடவும், பிரியாணிக்கு ஃபேமஸானது ஹைதராபாத் தான். அதனாலேயே ‘ஹைதராபாத் பிரியாணி’ என்ற பெயரிலேயே கடைகள் தொடங்கப்படுவதுண்டு. அப்படி பிரியாணிக்கு பெயர் போன ஹைதராபாத் இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் பிரியாணி சார்ந்து ஓர் மாபெரும் உணவுத்திருவிழா நடந்துள்ளது.

ஏராளமான உணவு வகைகள் இங்கு இருந்தபோதிலும், பிரியாணிதான் கண்கவர் வகையிலும் சுவைமிக்க வகையிலும் அமைந்திருக்கிறது. கெபாப், பிரியாணி ரகங்கள், சைவ உணவுகள் என ஈரான் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் மணக்க மணக்க சமைத்து சாப்பிடத் தூண்டி வருகின்றனர்.