புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தவிர்க்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுகிற ஏறக்குறைய 30 நபர்களை தினந்தோறும் கண்டறிந்து வருகிறோம். இந்த நேரத்தில் நமக்கு அருகில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் முழுஅடைப்பை மேற்கொண்டுள்ளனர். முழு அடைப்பை திரும்ப பெறும்போது கொரோனாவின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தயவு செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சுகாதாரத்தை கடைபிடித்தல், தனிமனித இடைவெளியுடன் செயல்படுதல் என்ற மூன்று முறைகளையும் தயவு செய்து பின்பற்ற வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே அரசுக்கு ஒத்துழையுங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.