ஐஎஸ் ஆதரவாளருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் கைதான டிராவல்ஸ் உரிமையாளரை சென்னை அழைத்து வந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் துருக்கி நாட்டிற்கு செல்ல முயன்ற போது டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஐஎஸ் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மண்ணடியில் உள்ள வெல்கோ டிராவல்ஸ் ஏஜண்ட் மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் தந்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்ததாக கூறினார் என டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை மண்ணடி வந்து விசாரித்த டெல்லி போலீசார், டிராவல் ஏஜெண்ட் முஸ்தபாவை அவரது சொந்த ஊரான தஞ்சை அதிராமபட்டினத்தில் கைது செய்தனர். பின்னர் இன்று அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதோடு, டிராவல்ஸ் அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு முஸ்தபாவை சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று இரவு அல்லது நாளை காலை அவரை டெல்லி அழைத்துச் செல்ல டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.