ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் யோகா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளத்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா சபை அறிவித்தது.
இந்தவகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.