இந்தியா

ஆதாரங்களை இலங்கை வழங்கினால் விசாரணை நடத்தப்படும் - இந்தியா

ஆதாரங்களை இலங்கை வழங்கினால் விசாரணை நடத்தப்படும் - இந்தியா

webteam

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெற்றதாக இலங்கை வெளியிட்ட தகவலை இந்தியா மறுத்துள்ளது.

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலர் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளதாக இலங்கை ராணுவ தளபதி  மகேஷ் சேனாயக் பிபிசி நேர்காணலில் தெரிவித்தார். ''எங்களிடம் உள்ள தற்போதைய தகவலின்படி  தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியா சென்றுள்ளனர். 

அவர்கள் எதற்கு இந்தியா சென்றார்கள் என உறுதியாக தெரியாவிட்டாலும், அவர்கள் ஏதாவது பயிற்சியில் ஈடுபடவோ அல்லது மற்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஆனால் இலங்கை வெளியிட்ட தகவலை இந்தியா மறுத்துள்ளது. தாக்குதலை தொடர்ந்து , காஷ்மீருக்கு வருகை தந்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்த போது பயங்கரவாதிகள் யாரும் இங்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன. வேறு பெயர்களில் பயங்கரவாதிகள் இந்தியா வந்திருக்க வாய்ப்புள்ளதால் இலங்கை அரசு ஆதாரங்களை வழங்கினால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என இந்திய பாதுகாப்பு முகமைகள் கூறியுள்ளன.