செய்தியாளர் - கார்த்திகேயன்
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் ஆழமற்ற கப்பல் என்ற திட்டத்தின் கீழ், 8 அதிநவீன கப்பல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், INS மாஹோ, INS மால்வன் ஆகிய இரு கப்பல்கள், ஏற்கெனவே இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிகவும் அதிநவீன 3-ஆவது கப்பலும் உருவாக்கப்பட்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடற்படைக்கான கப்பல் கட்டும் தளத்தில், இந்தக் கப்பலுக்கான அனுப்பீட்டு விழா நடைபெற்றது.
இந்திய கடற்படையின் மேற்கு மண்டலத்திற்கான தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சஞ்சய் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கடற்படையினர் பலர் கலந்துகொண்டனர். 80 சதவீதத்திற்கு அதிகமாக உள்நாட்டு உதிரிபாகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 900 டன் எடையை கொண்டதாக உள்ளது.
3 டீசல் எஞ்சின்கள், வாட்டர்ஜெட் விசை அமைப்பு மூலம் இயங்கும் இந்த கப்பல், ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் எளிதாகவும், மின்னல் வேகத்திலும் திரும்பும் திறன் கொண்டது. கடலில் மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பலில், தொடர்ந்து 3,300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
நீருக்கடியில் மறைந்திருக்கும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாகக் கண்டறியும் அபய் சோனார் தொழில்நுட்பம், நீருக்கடியில் சென்று எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை இந்தக் கப்பல் பெற்றுள்ளது. கடலோரப் பகுதிகளில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்கவும், போர்க் கப்பல்களுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடவும், முக்கியத் துறைமுகங்களைப் பாதுகாக்கவும் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.