இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை பலமடங்கு உயர்த்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. இது கடலடியில் ரகசியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரம் நீரில் தங்கி, எதிரி இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' அதிகாரப்பூர்வமாக கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கியான அரிதமன், முந்தைய கப்பல்களை விடப் பெரியது. கடலுக்கு அடியில் எதிரிகளிடம் சிக்காமல் மிக ரகசியமாகச் செயல்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டது.
அதிகப்படியான K-4 ரக அணு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இக்கப்பல், நீண்ட நேரம் நீருக்கு அடியில் தங்கியிருந்து எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது.
தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் செல்லும். இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் நீர்மூழ்கி கப்பல்களை விட இந்த கப்பல் 2 மடங்கு சக்தி வாய்ந்தது.
இந்த கப்பலில் உள்ள அணு ஏவுகணை கடலுக்கடியிலிருந்து வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது. அரிதமன் கப்பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவுகணைகள் உள்ளன. இவை 750 கிலோ மீட்டர் முதல் 1,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும்.