இந்தியா

மாணவிகள் மீது போலீசார் தடியடி: நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு

rajakannan

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது போலீசார் தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வியாழனன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கலைத்துறையைச் சேர்ந்த மாணவி ஒருவரை கேலி செய்ததுடன் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இச்சம்பவத்தில் மாணவியும் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய தடியடியில் மாணவிகள், பத்திரிக்கையாளர் உட்பட பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. 

இந்த நிலையில் மாணவிகள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவம் தொடர்பாக பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் உத்தரபிரதேச அரசு நீதி விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் திரிபாதி, ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி திட்ஸிட் தலைமையிலான குழு விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.