மத்தியப்பிரதேச மாநிலத்தை அடுத்துள்ள இந்தூரில் கடந்த 7 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாத நபர் ஒருவர், இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். அவரை தன்னார்வ தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது. என்ன நடந்தது? அறியலாம், இங்கே:
இந்தூரைச் சேர்ந்தவர் மும்தாஜ். இவரது மகன் ஜயித் (30). ஜயித் மிக சிறு வயதில் இருந்தே நன்றாக பாடுவார் என்றும் திறமைமிக்கவர் என்றும் கூறப்படுகிறது. ஜயித்திற்கு 9 வயதானபொழுது அவரது தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 15 வருடத்திற்கு முன் ஜயித்தின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தாய் மும்தாஜ்தான் ஜயிதை வளர்த்து வந்துள்ளார். ஜயித்தை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை மேற்கொள்ள மும்தாஜிடம் வசதி இல்லாததால், ஜயித்தை அப்படியே விட்டுள்ளார். ஜயித்தின் உடன்பிறந்த சகோதரி சாரா, தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாளாக நாளாக மனநிலை பாதிப்படைந்த ஜயித், அப்பகுதி மக்களின் மேல் கல் எறிவதுடன், அப்பகுதி வழியாக செல்லும் பெண்களுக்கும் தொல்லைக்கொடுத்து வந்துள்ளார். இதைக்கண்ட மும்தாஜ், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜயித்தை வீட்டிற்குமுன் இருக்கும் ஒரு பகுதியில், ஒரு இரும்பு கம்பியால் கையையும் காலையும் சேர்த்து கட்டிவிட்டு இருக்கிறார். அந்த சங்கிலி மூலம் அவர் அப்பகுதியில் 5 அடி வரை மட்டுமே சுற்றிவரமுடியுமாம். அருகேயே திறந்தவெளி என்பதால், காற்று மழை வெயில் அனைத்தையும் ஜயித் மோசமான முறையில் அனுபவித்து வந்துள்ளார்.
அவருக்கு பசி எடுத்தால் சில சமயம் கத்துவார் என்றும் சில சமயம் மிகவும் அமைதியாக இருப்பார் என்றும் அப்பகுதி மக்கள் உள்ளூர் ஊடகங்களில் கூறி உள்ளனர். அவரது அவல நிலையைக் கண்டு, வியாபாரிகள், வழிப்போக்கர்கள், அப்பகுதி மக்கள் எப்போதாவது அவருக்கு உணவு அல்லது குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவரின் மேல் பரிதாபம் கொண்ட சிலர் இவரின் நிலைமைக்குறித்து 'சன்ஸ்தா பிரவேஷ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ரகசிய தகவலை அளித்துள்ளனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வந்த பொழுது ஜயித், காலில் ஒரு கனமான இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்துள்ளார். மும்தாஜிடம் இரும்பு சங்கிலியை அகற்ற கேட்ட பொழுது அவர் மறுத்துள்ளார். பின்னர் தொண்டு நிறுவனத்தினர், இரும்பு சங்கிலியை உடைத்து ஜயித்தை மீட்டு பங்காங்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.