டெல்லி விமான நிலையம் அருகே விமானியை கடத்தி, கத்தி முனையில் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இண்டிகோ விமானத்தில், விமானியாக பணியாற்றி வருபவர், முகமது மெஹதி கஸான்ஃபனி. கனடாவை சேர்ந்த இவர், மனைவியுடன் டெல்லி அருகே குருகிராமில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் செல்ல இருந்தார். அவருக்கு விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கார், இண்டிகோ வாகன நிறுத்து மிடம் அருகே, நிறுத்தப்பட்டிருந்தது.
விமான நிலையத்தின் 2 வது கேட்டின் வழியே வெளியே வந்த அவர், கார் டிரைவரிடம் இண்டிகோ வாகன நிறுத்துமிடத்துக்கு எப்படி வர வேண்டும் என்று போனில் கேட்டுள்ளார். இதை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த வேறொரு கார் டிரைவர், ‘அந்த இடம் எனக்கு தெரியும். ரூ.100 கொடுங்கள். விட்டுவிடுகிறேன்’ என்றார்.
இதை நம்பி, முகமது அவரது காரில் ஏறினார். பின்னர் வேறொரு இடத்தில் அந்த காருக்குள் 3 பேர் ஏறினர். அவர்கள் முகமது வை மிரட்டி, பணம் கேட்டனர். அவரிடம் இருந்த 12 ஆயிரம் ரூபாயை பறித்த அவர்கள், ஏடிஎம் கார்டுகளை கேட்டனர். பின் நம்பரையும் மிரட்டிக் கேட்டதால், சொன்னார். அதில் இருந்து அவர்கள் ஒரு லட்சம் ரூபாயை எடுத்தனர். அவரிடம் இருந்த 302 அமெரிக்க டாலரையும் (சுமார் 20 ஆயிரம்) பறித்துக்கொண்டு, சுமார் 2 மணி நேரம் காரை அங்கும் இங்குமாக ஓட்டி சென்ற னர். பின்னர், மஹிபல்புர் மேம்பாலத்துக்கு அருகே அவரை இறக்கிவிட்டு கார்டுகளுடன் தப்பி விட்டனர்.
இதுபற்றி சனிக்கிழமை, விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார், அகமது. அந்த காரின் எண்ணையும் புகாரில் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் கைது செய்வோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.