இண்டிகோ
இண்டிகோ முகநூல்
இந்தியா

”என்ன ஒரே கரப்பான்பூச்சியா இருக்கு..” - பயணி பதிவிட்ட வீடியோ.. பதறி விளக்கம் கொடுத்த இண்டிகோ!

ஜெனிட்டா ரோஸ்லின்

விமானத்தில், உணவு வைக்கப்பட்ட பகுதியில் கரப்பான் பூச்சி ஊர்ந்து செல்லும் வீடியோவை பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த நிலையில் இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் சுகாரதாரம் விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் தருண் என்பவர், சமீபத்தில் இண்டிகோ விமானத்தின் உணவுப் பகுதியில் கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்லும் காட்சியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானநிலையில், இதற்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், இந்த தவறை ஒப்பு கொண்டுள்ளது.

மேலும் இது குறித்து நிறுவனம் தெரிவிக்கையில், ”இதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் ஊழியர்கள் முழு விமானத்தினையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தார்கள். மேலும் நாங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத, சுகாதாரமான பயணத்தினை வழங்கிட என்றும் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் இந்த நிகழ்வால் பயணிகளுக்கு சிரம அளித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்.” என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், இண்டிகோ விமானத்தில் இது போன்று பூச்சிகள் ஊர்ந்து செல்லும் காட்சி என்பது முதல் முறையல்ல, முந்தைய ஆண்டில்கூட பயணித்த பயணி ஒருவர் தான் உண்ணும்போது, மேஜையின் மீது கரப்பான பூச்சி ஊர்ந்து செல்லும் காட்சியை பகிர்ந்துள்ளார். மேலும் 2022 அக்டோபர் மாதமும் பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுப்போன்ற தொடர் சம்பவங்கள் இண்டிகோ விமானத்தின் சுகாதாரத்தினை கேள்வி குறியாக்கியுள்ளது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.