indigo PTI
இந்தியா

17,000 அடி உயரம்.. மின்னல் தாக்கியதில் சேதம்.. அவசரமாய் இறங்கிய இண்டிகோ விமானம்!

ஜூன் 19 அன்று கொல்கத்தா விமான நிலையத்தில் இடியுடன் கூடிய மழையின் போது நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு இண்டிகோ விமானம் மின்னலால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Prakash J

லக்னோவிற்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் மீது நடுவானில் மின்னல் தாக்கியதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், விமானி சூழ்நிலையைச் சமாளித்து லக்னோ விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு இண்டிகோ (IndiGo 6E925) விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 110 பேர் பயணம் செய்தனர். சுமார் 17,000 அடி உயரத்தில் அவ்விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக விமானத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதன் கடுமையான அழுத்தத்தால் ரேடார் அமைப்பைக் கொண்டுள்ள விமானத்தின் முன்பகுதி கூம்பு வடிவம் நசுங்கி சேதமடைந்தது. எனினும், லக்னோ விமான நிலையத்தில் விமானம் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகள், ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

indigo

அதேநேரத்தில், மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லக்னோ விமான நிலையத்தில் அந்த விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆனால், தொடர் பயணம் மேற்கொண்டவர்களுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமடைந்த விமானத்தைப் பொறியாளர்கள் குழு தீவிர ஆய்வு செய்து வருகிறது. ஜூன் 19 அன்று கொல்கத்தா விமான நிலையத்தில் இடியுடன் கூடிய மழையின் போது நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு இண்டிகோ விமானம் மின்னலால் தாக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.