வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் X
இந்தியா

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்., முதல் நாள் பயணத்திலேயே குப்பைக்காடான அவலம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் நாள் பயணத்திலேயே பயணிகள் குப்பைகளை வீசி அசுத்தப்படுத்தியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

மேற்கு வங்கத்தின் மால்டா நகரிலிருந்து அசாமின் கவுகாத்தி நோக்கி செல்லும், இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிநவீன வசதிகள், விமானத்தைப் போன்ற உள்அமைப்பு என பெரும் எதிர்பார்ப்புடன் இந்த ரயில் பயணம் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த ரயிலின் முதல் பயணத்திலேயே சில பயணிகள் காட்டிய பொறுப்பற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

ரயில் பெட்டிகளின் தரைப்பகுதி முழுவதும் காலி தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்களின் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஸ்பூன்கள் சிதறிக்கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த பயணி ஒருவர், "இது ரயில்வேயின் தவறா? அரசின் தவறா? அல்லது நமது தவறா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "நமது மக்களின் 'சிவிக் சென்ஸ்' எனப்படும் பொது ஒழுக்கம் இவ்வளவுதான்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், "டிக்கெட்டிற்கு 2,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவு செய்யத் தெரிந்தவர்களுக்கு, குப்பையைத் தொட்டியில் போடத் தெரியவில்லை" என்றும் "அதிகப் பணம் கொடுத்து பயணம் செய்பவர்களுக்கு அதிக ஒழுக்கம் இருக்கும் என்று நினைத்தது தவறு" எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், "இப்படிச் செய்பவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் அல்லது மீண்டும் ரயிலில் பயணிக்கத் தடை விதிக்க வேண்டும்" எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரயில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ரயில்வே அதிகாரி ஆனந்த் ரூபனகுடி என்பவர், "இந்த ரயிலை உங்கள் வீட்டைப் போலப் பராமரிக்கத் தெரிந்தால் மட்டும் இதில் பயணம் செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், அதையும் மீறி ரயிலின் முதல் நாளிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது இந்திய ரயில்வே ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.