இந்தியா

எவரும் எட்டாத இடத்தை பிடித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. யார் இந்த இந்தியாவின் Big Bull?

webteam

தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். பங்குச் சந்தையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து காணலாம்.

யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு பன்முகங்கள் உண்டு. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் முன்னிலையிலிருந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. சமீபத்தில் "ஆகாசா ஏர்" என்ற விமான நிறுவனத்தினையும் தொடங்கி தனது முதல் விமானத்தை வானில் பறக்க விட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்தியப் பங்குச் சந்தைகளின் தந்தை என்றும் இந்தியாவின் வாரன் பஃபெட் என்றும் அழைக்கப்பட்டு வந்தவர் இன்று தனது 62வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மரணம் பேரிழப்பு என்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பல இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும் செல்வத்தை ஈட்டி, முன்னணி முதலீட்டாளராக இறுதிவரை இருந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. சமீப காலமாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இறுதியாக அவர் தொடங்கிய ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் தொடக்க விழாவிற்குக் கூட நடக்க முடியாமல் வீல் சேரில்தான் வந்தார். அந்த நிலையில் அவரை பார்த்த அனைவரின் பிராத்தனையும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்நிலையில்தான் இன்று அதிகாலை 6.45 மணிக்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்குச் செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் ஆர்வம் இருக்கும் மக்களிடத்தில், ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா சொல்லும் ஸ்டேட்மெண்ட்டும் , அவரது ஒவ்வொரு மூவ்களும் கவனிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அவரது ஒவ்வொரு மூவ்களிலிருந்து ஒவ்வொரு டிப்ஸ் எடுத்துக்கொள்ள முடியும் என்போர்களும் உண்டு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயரும் என்று கூறும் அளவிற்கு, இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவராக இருந்துவந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலா. தனது இளம் வயதிலேயே பங்குச் சந்தை முதலீட்டில் கால் பதித்தார் ராகேஷ். பொதுவாகப் பலரும் பங்குச் சந்தை முதலீட்டை முழுமையாக நம்பி இறங்கத் தயக்கம் காட்டி வந்த நேரத்தில் துணிச்சலாக இறங்கி ஸ்கோர் செய்தார். பின் நாளில் பலருக்கும் ராகேஷ் தான் ரோல் மாடல். பங்கு சந்தையினால் கில்லியாகத் திகழ்ந்து வந்த, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இளம் வயதில் பங்குச்சந்தையில் ஆர்வம் ஏற்பட்டதுடன், அவர் செய்த முதல் முதலீடு 5000 ரூபாய். தொடர் வெற்றிகளையும் லாபங்களையும் மட்டுமே ராகேஷ் தனது வாழ்க்கையில் சந்திக்கவில்லை. பலமுறை தோல்வி. பல கணிப்புகள் தவறின. இருந்தாலும் ஒருமுறை கூட மனம் தளரவில்லை. தனது தவறை சரியாகத் திருத்தினார். தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துகொண்டே இருந்தார்.

அனைவரும் தேர்வு செய்யும் பாதையைத் தேர்வு செய்யாமல், தனியாக ஒரு பாதையில் பயணிக்கும் போது பல இடர்பாடுகள் வரும். ஆனால் அந்த பாதையின் இலக்கும் தெளிவாக இருக்கும் போது, திட்டங்கள் சரியாக இருக்கும் போது, ஒவ்வொரு மூவ்வும் நிதானமாகவும் துல்லியமாகவும் இருக்கும் போது உங்களுக்கான வெற்றியை உங்களைத் தேடி வரும் என்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எப்போதும் கூறுவார்.

பங்கு வர்த்தகத்தில் ராகேஷின் கணிப்புகள் துல்லியமாக இருக்கும். அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் தான், சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு தொடர் சரிவைத் தான் சந்திக்கும். இதனால் அதில் புதிதாக யாரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பழைய சோமேட்டோ பங்குதாரர்களுக்கும் ஒரு அலார்ச் செய்தியைக் கொடுத்து இருந்தார் ராகேஷ். அவர் சொன்னது போலவே, நவம்பர் 2021, சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர் சரிவைச் சந்தித்தது.

கடந்த வருடம், ஃபெடரல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி வரிசையில் கனரா வங்கியும் இணைந்தது மூலம் மூன்று வங்கிகளின் முக்கிய பங்குதாரராகினார் ராஜேஷ். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை வெறும் தொழிலதிபர் என்று சுருக்கிவிட முடியாது. அவர் சிறந்த முதலீட்டாளர், பங்குச் சந்தை வர்த்தகர் மற்றும் ஆப்டெக் லிமிட்டட், ஹங்கமா டிஜிட்டல் மீடியா நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைந்தாலும் அவரது காட்டிய பாதை மறக்காது. பங்குச் சந்தையில் காலூன்ற நினைப்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அவர் என்றும் ஒரு இன்ஸ்பிரேசன் . ” இவ்வளவு வெற்றிகளை அடையப் பல ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டி வரும். பலர் எச்சரிப்பார்கள், தடுப்பார்கள். ஆனால் உங்களிடம் இருக்க வேண்டியது ஒன்று தான். துல்லியமான கணிப்பு, சரியான முடிவு” என்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வார்த்தைகள் என்றென்றைக்குமானவை.

எழுத்து - கே.அபிநயா