இந்தியாவின் மூவண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி , நாம் குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். சரி... ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாகத் தேர்வு செய்தது ஏன்?
1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றபோதும் கூட, ஆங்கிலேயே அடிமைத்தனத்துக்கும், சுதந்திர தேசத்துக்கும் இடைப்பட்ட ஒரு சுயாட்சி அரசாகவே இந்திய ஆட்சிப் பரிபாலனம் இருந்தது. சொந்தமான அரசியலமைப்புச் சட்டம் இல்லாததால், 1935-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சட்டமே அதுவரை நடைமுறையில் இருந்தது. ஒரு முழுமையான இறையாண்மை கொண்ட குடியரசாக மாற இந்தியாவுக்கு ஒரு வலுவான அரசியலமைப்புத் தேவைப்பட்டது. இதற்காக அரசியல் சிற்பி அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகால உழைப்புக்கு பிறகு அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த ஜனவரி 26, 1950 வரை காத்திருந்தனர். ஏன் இந்தத் தேதி? என பார்த்தால் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்று நிகழ்வு காரணமாக இருந்தது. 1929-இல் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து முழுமையான சுதந்திரம் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி, 1930 ஜனவரி 26 அன்று இந்தியாவின் சுதந்திர தினம் என்று பிரகடனம் செய்து, நாடு முழுவதும் நம் தேசத் தலைவர்களால் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது.
அந்த உணர்வு மிக்க நாளின் நினைவாகவே, 1950-இல் அதே தேதியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இந்தியா ஒரு குடியரசாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் நாடாகவும் உருமாறியது. 2026- ஆம் ஆண்டில் நாம் கொண்டாடும் இந்த 77-ஆவது குடியரசு தினம், 1930-ல் நாம் எடுத்த அந்த 'பூர்ண ஸ்வராஜ்' உறுதிமொழியின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகத்தான தருணம்.