தங்கம் web
இந்தியா

ரூ.2 லட்சம் கோடிக்கு தங்கம்.. 3 மாதத்தில் இந்தியர்கள் செய்த பிரம்மாண்ட செலவு!

ஒரு குண்டுமணியளவு தங்கம்ன்னாகூட தங்கம் தங்கம்தானே? இதற்கு ஏற்றபடிதான் இருக்கிறது இந்தியர்களின் நடவடிக்கை. என்னதான் தங்கம் விலை உச்சாணி கிளையை எட்டி இருந்தாலும் ஏன் இந்தியர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மட்டுமல்லாமல், தங்க இறக்குமதி வரியும் 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்தியர்களின் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

Gold Rate Chennai

உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஜூன் காலாண்டில் இந்தியர்கள் ரூ.1.98 லட்சம் கோடி மதிப்பிலான 131.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், இது ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்த நிலையில், மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் தேவை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் அளவு அடிப்படையில், 139.7 டன்னிலிருந்து 131.4 டன்னாக 6 சதவீதம் குறைந்துள்ளது.

தங்க நகைகள் வாங்குவது 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக இருந்தாலும், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களின் வாங்குதல் 9 சதவீதம் அதிகரித்து 50.3 டன்னாக உயர்ந்துள்ளது. அதிகரித்த தங்கம் விலையிலும், பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் முதலீட்டுc சொத்தாக தங்கத்தை மக்கள் தொடர்ந்து கருதுவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

gold

அதேபோல், தங்க ETF-களில் முதலீடு 49 சதவீதம் அதிகரித்து 4.2 டன்னாக உயர்ந்துள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 17 சதவீதம் குறைந்து 19.2 டன்னாகவும், அதிக இறக்குமதி வரி காரணமாக தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டன்னாகவும் பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சத்திற்குக் கீழ் சரிந்தது வாங்குதலை அதிகரிக்கச் செய்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வரும் பண்டிகை மற்றும் திருமண சீசன் காரணமாக ஆண்டின் இரண்டாம் பாதியிலும் தங்க தேவை வலுவாக இருக்கும் என்றும், 2026-ஆம் ஆண்டின் மொத்த தேவை 650 முதல் 750 டன் வரை இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.