பிரேமா வாங்ஜோம் தோங்டாக் எக்ஸ் தளம்
இந்தியா

’அருணாச்சல் சீனாவின் பகுதி’ - பாஸ்போர்ட்டைப் பிடுங்கி இந்திய பெண்ணை தடுத்த சீன அதிகாரிகள்!

அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், பெம் வாங் தோங்டாக் என்பவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Prakash J

அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், பெம் வாங் தோங்டாக் என்பவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்திடம் அவர் முறையிட்டுள்ளார், இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் எனக் கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்றாலும், இதனை சீனா ஏற்காமல் தொடர்ந்து தங்கள் நாட்டின் பகுதியாகவே குறிப்பிடுகிறது. அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் 1972 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. முதலில் யூனியன் பிரதேசமாக இருந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது. ஆனால், அருணாச்சல பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதிலிருந்து குடியேற்றங்களும் சர்வதேச சட்டங்களை மீறி ராணுவ முகாம் அமைப்பது, சீன மொழி பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என்றும் சொந்தம் கொண்டாடுகிறது சீனா.

இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த யுனைடெட் கிங்டமில் வசிக்கும் பெம் வாங் தோங்டாக் என்பவர், கடந்த நவம்பர் 21ஆம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்வதற்காக சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது அவருடைய பாஸ்போர்ட்டைச் சோதனை செய்த சீன குடியேற்ற அதிகாரிகள், ‘உங்களுடைய பாஸ்போர்ட்டில், அருணாச்சலப் பிரதேசம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது செல்லாது. தவிர, அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி’ எனத் தெரிவித்து அவருடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாக பெம் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அதே அதிகாரிகளிடம், ’ஷாங்காய் வழியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் நான் முன்பு பயணித்தேன்’ என அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால், அவர்கள் அதைப் பற்றிக் கேட்காமல், தன்னை சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கச் சொன்னதாகவும், கேலி செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், செல்லுபடியாகும் விசாவை வைத்திருந்தாலும் ஜப்பானுக்குச் செல்லும் தனது விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டதாகவும், இதனால் 18 மணி நேரம் காக்கவைக்கப்பட்டதாகவும், உணவின்றித் தவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சைனா ஈஸ்டர்னில் பிரத்யேகமாக ஒரு புதிய டிக்கெட்டை வாங்க அதிகாரிகள் தன்னை அழுத்தம் கொடுத்ததாகவும், அவ்வாறு செய்த பின்னரே தனது பாஸ்போர்ட் திருப்பித் தரப்படும் என்றும் மறைமுகமாகக் கூறியதாகவும், இதனால் தவறவிட்ட விமானங்கள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளால் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இறுதியில் அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு நண்பர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசி அதன் பின்னரே, ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரேமா வாங்ஜோம் தோங்டாக்

இதுதொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறும் பெம், ’இந்தியாவின் இறையாண்மைக்கும் அருணாச்சலப் பிரதேச குடிமக்களுக்கும் நேரடி அவமானம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விசயம் தொடர்பாக சீன அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சர்வதேச பயணங்களின்போது அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியர்கள் இனிமேல் இதுபோன்ற தடைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.