எவரெஸ்ட் சிகரம்
எவரெஸ்ட் சிகரம் file image
இந்தியா

இதயத்தில் பேஸ்மேக்கர் கருவியுடன் சாகச பயணம்; எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைக்க விரும்பிய பெண்மணி மரணம்!

Prakash J

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்த சிகரத்தில் ஏறி பலரும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய வீராங்கனை ஒருவரும் ஏறிச் சாதனை படைக்க விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக அந்தச் சாதனை செய்ய இயலாது அந்தப் பெண்மணி உயிரிழந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் வெவ்வேறு வகைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற 59 வயதான வீராங்கனையும், மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்பினார். இதற்காக நேபாள அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர் மலை ஏறத் தொடங்கினார். எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட மலையேற்ற வீராங்கனை சுசான், முதல் 2 கட்டங்களை தாண்ட நீண்டநேரம் எடுத்துக் கொண்டார்.

இதனை அறிந்த மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை மலை ஏற போதுமானதாக இல்லை எனக்கூறி, ’தாங்கள் மலை ஏற்றத்தை நிறுத்திக் கொள்ளவும்’ என அறிவுறுத்தினர். ஆனால் சுசான், மலை ஏற்றத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஏறியுள்ளார். ஒருகட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசானை, மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 18) மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பயண அமைப்பாளரான டெண்டி ஷெர்பா, ”250 மீட்டர் நீளமுள்ள பேஸ் கேம்ப் மேலே உள்ள குரோம்ப்டன் பாயிண்ட்டை அடைய, மலை ஏறுபவர்கள் வழக்கமாக 15 முதல் 20 நிமிடங்களில் தூரத்தைக் கடக்க முடியும். ஆனால், சுசான் 5 மணி நேரம் எடுத்துக்கொண்டார். இதனால் அவரை, மலையேற்றத்தைக் கைவிடச் சொன்னோம். ஆனால் அவர் எவரெஸ்ட்டில் ஏறுவதில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் அவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவரது உடல்நிலைக்கு மத்தியிலும், இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தி, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் ஆசியப் பெண்மணி என்ற புதிய உலக சாதனையைப் படைக்க அவர் விரும்பினார்” என தெரிவித்துள்ளார்.