அபிநந்தனை வரவேற்க சென்னையிலிருந்து டெல்லி சென்ற அபிநந்தனின் பெற்றோர்களை விமானத்திலிருந்த மக்கள் அனைவரும் கைதட்டி ஆராவாரத்தோடு வரவேற்ற வீடியோ சமூக வலைத்தளங்கள் மூலம் வேகமாக பரவி வருகிறது.
அபிநந்தன் என்பவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தவர். எல்லையில் பயங்கரவாதிகளோடு நடந்த விமானத் தாக்குதலின் போது, அவர் சென்ற விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பாராசூட்டில் கீழே குதித்துவிட்டார். அவர் விழுந்த இடமானது பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதி. இதன் காரணமாக அவர் தனி ஒருவராக பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிபட்டார். அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர், பாக். ராணுவத்தினர்.
இதனை அறிந்த இந்தியாவும், அண்டை நாடுகளும் கொதித்து எழுந்தனர். இந்த சம்பவத்தினால் அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பாகிஸ்தானை கடுமையாக எதிர்த்தனர். இதனை தொடர்ந்து அபிநந்தனை உடனடியாக விடுவிக்க பாக்.அரசிடம் இந்திய வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். உடனே பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில் இன்று (01.03.2019) விடுவிக்கப்படுவார் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
இதனால் அவர் பெற்றோர் மட்டுமல்லாமல் இந்தியாவே சந்தோஷக் கடலில் மூழ்கி இருந்தனர். அவரை அழைத்து வர பெற்றோர்கள் டெல்லி விரைந்தனர். பாகிஸ்தானிலிருந்து மாலை 3 மணிக்கு வாகா எல்லை மூலம் அபிநந்தனை இந்தியா அழைத்து வர உள்ளதாக தகவல். அவர் வரவை எதிர்பார்த்தும், வரவேற்கவும் இந்தியர் அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.