இந்தியா

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் - ஆப்பு வைத்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

JustinDurai

சக பயணி மீது மதுபோதையில்  சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சங்கர் மிஷ்ரா என்பவர், குடிபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது அதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க் நகரில் இருந்து புறப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த ஒரு பயணி விடிய விடிய மது அருந்திக் கொண்டும், அருகில் இருந்த பயணிகளிடம் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டும் வந்துள்ளார். இதுதொடர்பாக சக பயணிகள் புகார் அளிக்கவே, விமான ஊழியர்கள் அவரை எச்சரித்தனர்.  இந்நிலையில், அந்த போதை ஆசாமி தனக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. 

இதையடுத்து, அவரிடம் விமான ஊழியர்கள் விசாரணை நடத்தினர். இதில், தான் தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிட்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் அவர் கேட்டுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பயணியும் அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். எனினும், சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்ததும், ஊழியர்கள் அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில்  சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்தது. இதேபோல் இந்திய மாணவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறையும் கூறியுள்ளது.