stock market Reuters
இந்தியா

ரூ.1 லட்சம் கோடி வந்ததா? தலைகீழாக மாறிய பங்கு சந்தை! இதுதான் சிறப்பான கம்பேக்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இடைக்கால தேர்தலில் பெற்ற படுதோல்வியால் இந்திய பங்கு சந்தைகள் அபார வளர்ச்சியை பெற்றுள்ளன.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்தியாவில் இந்த ஆண்டு பங்கு சந்தைகள் ஆரம்பத்தில் இருந்தே பெரும் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. குறிப்பாக, ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மிகமோசமான வீழ்ச்சியை பங்கு சந்தைகள் எதிர்கொண்டன. செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனங்கள் நல்ல முன்னேற்றங்களை கண்டதால், பலரும் இந்தியாவில் பங்குகளை விற்பனை செய்துவிட்டு, வெளிநாட்டு பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்திய பங்கு சந்தைகளில் இருந்து வெளியேறினர். அமெரிக்கா - ஈரான் இடையே நிலவிய போரினால், இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக உயர்ந்ததும், பங்கு சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால், NSE மற்றும் BSE ஆகிய இரு பங்கு சந்தைகள், பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஆனால், உலக பங்கு சந்தைகள், அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல வளர்ச்சியை பெற்றன. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இந்திய பங்கு சந்தைகளின் நிலை தலைகீழாக மாறி, அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. அதாவது, சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில், அதிபர் டிரம்ப் மிகப்பெரிய தோல்வியை தழுவினார். இந்த தோல்வியை தொடர்ந்து, ஈரான் உடனான போர் பதற்றம் குறையும் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கச்சா எண்ணெய் விலையும் குறைய ஆரம்பித்துள்ளது.

stocks

மேலும், தங்கமும் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தான், அந்நிய செலாவணியை அதிகமாக செலவழிக்கிறோம். தற்போது, இவை இரண்டும் விலை சரிந்து வருவதால், நாம் அந்நிய செலாவணியை செலவழிக்க வேண்டிய தேவை இருக்காது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஒரு அமெரிக்கா டாலருக்கு சமமமான இந்திய கரன்சியின் மதிப்பு முன்பு 97 ரூபாயாக இருந்த நிலையில், அது தற்போது 93 ரூபாயாக குறைந்திருக்கிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி முதல் அக்டோபர் வரை, சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்தில் மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக, பங்கு சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பங்கு சந்தை தொடர்ச்சியாக வளர்ச்சியை பெறும் என்று கணித்த அவர், இந்த ஆண்டு முடியும்போது, ஏற்றத்துடனே பங்கு சந்தை நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பி.ஆர்.சுந்தர், இந்திய பங்கு சந்தைகள் ஐந்து மாதம் உச்சத்திலும், அமெரிக்க பங்கு சந்தைகள் 5 மாதம் Bottom-ல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.