இந்தியா

மழையால் ரத்து செய்யப்பட்ட ரயில்; மாணவருக்கு காரை முன்பதிவு செய்து உதவிய ரயில்வே அதிகாரிகள்

மழையால் ரத்து செய்யப்பட்ட ரயில்; மாணவருக்கு காரை முன்பதிவு செய்து உதவிய ரயில்வே அதிகாரிகள்

ச. முத்துகிருஷ்ணன்

கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், மாணவர் ஒருவருக்கு ரயில்வே நிர்வாகம், வாடகை கார் முன்பதிவு செய்து கொடுத்த சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் பொறியியல் படிக்கும் மாணவரான சத்யம் காத்வி என்பவர், குஜராத்தில் உள்ள ஏக்தா நகர் ரயில் நிலையத்திலிருந்து வதோதராவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளார். ஆனால் கனமழை காரணமாக, ஏக்தா நகரிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வதோதராவுக்கு செல்ல முடியாமல் மாணவர் தவித்துள்ளார்.

இது குறித்து அறிந்த ரயில்வே அதிகாரிகள், மாணவர் சத்யம் காத்வி வதோதராவுக்கு சென்று பின்னர் சென்னை செல்லும் ரயிலில் பயணிப்பதாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் . இரண்டு மணி நேர பயணத்திற்காக, மாணவருக்கு வாடகை கார் முன்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து காரில் பயணித்த மாணவர் குறித்த நேரத்தில் வதோதரா ரயில் நிலையத்தை அடைந்துள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மாணவர், ரயில்வே அதிகாரிகள் பேருதவியாக இருந்ததாகவும், ஒவ்வொரு ரயில் பயணிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். “கடைசி நேரத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டதும் பதறினேன். ஆனால் ஏக்தா நகரில் இருந்த ரயில்வே அதிகாரிகள் எனக்காக ஒரு காரை பதிவு செய்து வதோதராவிற்கு அனுப்பி வைத்தனர்.

குறித்து நேரத்தில் அங்கு நான் சென்று சேர்ந்ததும், எனக்காக வதோதரா ரயில்வே அதிகாரிகள் காத்திருந்தனர். என் லக்கேஜ்களை எல்லாம் தூக்கிக் கொண்டு சரியான பிளாட்பாரத்திற்கு அவர்களே கூட்டி சென்று ரயிலில் ஏற்றிவிட்டனர். தற்போது நிம்மதியாக அந்த ரயிலில் பயணித்து கொண்டிருக்கிறேன்” என்று அந்த வீடியோவில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார் சத்யம்.