இந்திய ரயில்வே PT
இந்தியா

இந்திய ரயில்வே எடுத்த அதிரடி முடிவு.. மாற்றம் காணப்போகும் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை!

ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, முதலில் டோக்கன் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

திடீரென திட்டமிடப்படும் பயணங்களின்போது, பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைதான். பயண நாளுக்கு முந்தைய நாளில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதனைச் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்வது. மற்றொன்று, இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTC மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்வது.

TICKET COUNTER

ஆன்லைன் முன்பதிவில் இணையதள கோளாறுகள், பணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற பிரச்னைகள் இருப்பதுடன், ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் நீண்ட வரிசை, தள்ளுமுள்ளு மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் போன்ற பிரச்னைகளும் இருந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரயில்வே புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, முதலில் டோக்கன் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் பெற விரும்பும் பயணிகள், முதலில் டோக்கன் பெற்ற பிறகே முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல முடியும். ஒரு நிலையத்தில் ஏசி தட்கல் முன்பதிவுக்கு 10 டோக்கன்களும், ஏசி அல்லாத தட்கல் முன்பதிவுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்படும்.டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணின் அடிப்படையிலேயே டிக்கெட் பதிவு செய்யப்படும். இதன்மூலம் நீண்டநேரம் வரிசையில் நிற்பது, தள்ளுமுள்ளு மற்றும் கூட்டநெரிசலைக் குறைக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த மாற்றம் IRCTC ஆன்லைன் முன்பதிவுக்குப் பொருந்தாது எனவும் ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

INDIAN RAILWAYS

முதற்கட்டமாக, இந்த நடைமுறை இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway) மண்டலத்தில் உள்ள கோட்டா கோட்டத்துக்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் அமல்படுத்தப்படுகிறது. இதன் செயல்பாடுகளைப் பொறுத்து, பின்னர் நாடு முழுவதும் இந்த நடைமுறையை விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் அங்கீகாரம், OTP சரிபார்ப்பு மற்றும் முகவர்களுக்கு முதல் 30 நிமிடங்கள் முன்பதிவு தடை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை இந்திய ரயில்வே அமல்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது டோக்கன் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர