பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்த 80 வயது லட்சத்தீவு செவிலியர், உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவரைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.. லட்சத்தீவைச் சேர்ந்தவர் 80 வயதான இந்தும்பி கௌரம் கக்காடா (Hindumbi Kaurom Kakkada). 53 ஆண்டுகள் செவிலியர் சேவை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள், அவசர கால மருத்துவப் பணிகள் என லட்சத்தீவு மக்களின் ஆபத்பாந்தவராகத் திகழ்ந்து வருகிறார்.
60 வயதில் ஓய்வு பெற்ற பிறகும், ஒப்பந்த அடிப்படையில் இன்றும் தன் சேவையைத் தொடர்ந்து வருகிறார். 1972இல் மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில், பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திலும், நடுக்கடலில் மீன்பிடிப் படகுகளிலும் பிரசவம் பார்த்துள்ளார் இந்தும்பி கௌரம் கக்காடா.
வீதி வீதியாகச் சென்று பிரசவகாலப் பராமரிப்பு, தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய இவரின் சேவை, சுனாமி, கொரோனா காலங்களிலும் தொடர்ந்தது. காந்தியவாதியான தனது தந்தையின் வழிகாட்டுதலில் மக்கள் சேவையைத் தொடங்கிய இவருக்கு, 2023இல் இந்தியக் குடியரசுத் தலைவர் 'புளோரன்ஸ் நைட்டிங்கேல்' விருது வழங்கி கௌரவித்தார்.
தற்போது 214 நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரம் செவிலியர்களில், 'ஆஸ்டர் கார்டியன்ஸ் உலகளாவிய செவிலியர் விருது 2026'-க்கான இறுதிப் பத்து பேர் பட்டியலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுகள் வென்றாலும், தோற்றாலும் இன்றும் கவரட்டி மருத்துவமனையில் தனது அடுத்த தடுப்பூசிப் பணிக்கான அட்டவணையுடன் சுறுசுறுப்பாக வலம் வருகிறார்.