இந்தியா

கையால் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான நலத்திட்டம்

EllusamyKarthik

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது. 

கழிவுகளை கையால் அகற்றும் பணியில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 276 பேரின் குடும்ப உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுள்ளனர். இதன் விவரங்கள் உள்ளன. 

கடந்த 2003ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீது, உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.  இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு பலன்களை அளித்து வருகின்றன.

மேலும், கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் உதவிகள்:

>குடும்பத்தில் உள்ள ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.

>துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவி அளிக்கப்படுகிறது.

>சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம்  அளிக்கப்படுகிறது. 

>கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது.

>கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை  மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் நாடு முழுவதும்  தடை செய்யப்பட்டது .  அன்று முதல் யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.  இதை மீறுபவர்களுக்கு  எம்எஸ் 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி  2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.