2014 முதல் 2020 வரை இந்தியாவுக்காக விளையாடிய கேதர் ஜாதவ், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தனது 39வது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்.
இந்த நிலையில், அவர் தற்போது பாஜக கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார். மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர், இன்று (ஏப்.8) கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்தது குறித்து ஜாதவ், “சத்ரபதி சிவாஜிக்கு நான் தலைவணங்குகிறேன். பிரதமர் மோடி ஜி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன்மூலம், பவன்குலேவின்கீழ் நான் பாஜகவில் நுழைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கேதவ் கட்சியில் இணைந்தது குறித்து மாநில பாஜக தலைவர் பவான்குலே, "இது எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரைத் தவிர, ஹிங்கோலி மற்றும் நான்டெட்டில் இருந்து பலர் எங்களுடன் இணைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்தியாவுக்காக அறிமுகமான ஜாதவ், அடுத்து 2015ஆம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமானார். 2020ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதே அவருடைய கடைசிப் போட்டியாகும். தனது ஆறு வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், ஜாதவ் 73 ஒருநாள் போட்டிகளில் 1,389 ரன்களையும், 9 டி20 போட்டிகளில் 122 ரன்களையும் எடுத்தார். 42 ஒருநாள் இன்னிங்ஸ்களில் பந்துவீசி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 2018 ஆசிய கோப்பை வென்ற இவர், 2019 ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும், 2017 சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் இடம் பெற்றிருந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்), தற்போது செயலிழந்த கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (இப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காகவும் ஜாதவ் விளையாடியுள்ளார். 2018ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.