இந்தியா

கொரோனாவுக்கு முன்பே அதிக கடன் சுமை.. நிதிச்சிக்கலில் இந்தியக் குடும்பங்கள் - ஓர் அலசல்

sharpana

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பே குடும்பச் செலவுக்கான கடன்கள் அதிகரித்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், கொரோனாவுக்கு முன்பே இந்திய குடும்பங்களின் கடன்கள் அதிகரித்திருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு கணக்கெடுப்பின் படி, குடும்பங்கள் கடன் வாங்குவது நகர்ப்புறங்களில் 42 விழுக்காடாகவும், கிராமப் புறங்களில் 84 விழுக்காடாகவும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடன்களில் சிக்கி தவிக்கும் இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 2012 முதல் 2018ஆம் ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் உள்ள குடும்பங்களே கடனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடன்களை திருப்பி செலுத்துவதற்கு போதிய விலைமதிப்பற்ற சொத்துக்கள் இவர்களிடம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக வீட்டுக்கடன் அளவிடப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2008ல் 43 விழுக்காடாக இருந்த குடும்பங்களின் வீட்டுக்கடன் அளவு, 2016ல் 31 விழுக்காடாக குறைந்தது. அதுவே, கடந்த 2019ல் 32.5 விழுக்காடாகவும், 2020-21ல் 37.3 விழுக்காடகவும் அதிகரித்துள்ளது. இது 2021-22ல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுக்கடனின் பங்கு 60 விழுக்காட்டை தாண்டினால், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆண்கள் தலைமையிலான குடும்பங்களை விட பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் குறைவாக கடன் வாங்கியுள்ளது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தென்மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் அதிக கடன் வைத்துள்ளதாகவும், அதில், விவசாய குடும்பங்கள் அதிக கடன்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி விவாத நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்த வீடியோ பார்க்கலாம்.