இந்தியா

சைக்கிளில் சென்றே கிராமங்களில் பொருளாதார ஆராய்ச்சி: ’அமர்த்தியா சென்’ பிறந்த நாள் இன்று!

EllusamyKarthik

இந்திய விடுதலைக்கு பின்னர் முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் பொருளாதார மேதை அமர்த்தியா சென். அவருக்கு இன்று பிறந்த நாள். 

பிரிட்டிஷ் இந்தியாவில் 1933இல் இதே நாளில் வங்காள மாகாணத்தில் பிறந்தவர். அவரது அப்பா வேதியியல் பேராசிரியர். அவரது தாய் வழி தாத்தா க்ஷிதி மோகன் சென்

எழுத்தாளர். ரபீந்திரநாத் தாகூருடன் இணைந்து எழுத்துப் பணிகள் மேற்கொண்ட அனுபவங்களும் அவருக்கு உண்டு. அமரத்தியா சென்னுக்கு பெயர் வைத்ததும் தாகூர் தான். 

கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். தொடர்ந்து கேம்பிரிட்ஜிலும் இரண்டாவது முறையாக பி.ஏ. பொருளாதாரம் படித்தவர், தொடர்ந்து ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு சர்வதேச அளவில் புகழ் பெற்றார் சென். அதோடு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

அவரது பணிக்காக பல விருதுகளை வென்றுள்ள அமர்த்தியா சென் 1998இல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார். அதன் மூலம் இந்தியா விடுதலை பெற்ற பிறகு நோபல் பரிசை வென்ற முதல் இந்தியரான அவர். வறுமையில் வாழும் மக்களின் நிலை குறித்த ஆய்வை மேற்கொள்ள மேற்குவங்கத்தின் பல கிராமங்களுக்கு கருப்பு நிற அட்லஸ் சைக்கிளில் தான் அமர்த்தியா சென் பயணம் மேற்கொள்வது வழக்கமாம். 

இப்போது அந்த சைக்கிள் நோபல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுட்டள்ளது. 

இளம் வயதிலேயே கேன்சருடன் போராடி வென்ற சென் மக்களின் வறுமையை மையமாக வைத்து பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தற்போது ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள அமர்த்தியா சென் இந்திய அரசை தனது கருத்துகளால் விமர்சனம் செய்வதும் உண்டு.