இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாக, 25 வார கருவில் இருந்த குழந்தைக்கு, கருப்பையிலேயே தண்டுவடக் குறைபாட்டை சரிசெய்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட திறந்த கரு அறுவை சிகிச்சை (Open Fetal Surgery) இது என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருவுற்ற தாயின் வயிற்றில் இருந்த 25 வார கருவுக்கு 'ஸ்பைனா பிஃபிடா' எனப்படும் கடுமையான தண்டுவடக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் மிகவும் தீவிரமான 'லும்போசாக்ரல் மைலோமெனிங்கோசீல்' என்ற பாதிப்பு இருந்தது. இதனால் குழந்தையின் தண்டுவடம் மற்றும் அதன் உறைகள், முதுகுத் தண்டில் உள்ள திறப்பு வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்ததோடு, மூளை தண்டுவட திரவமும் கசிந்து கொண்டிருந்தது.
இந்த குறைபாட்டை சரிசெய்யாவிட்டால், பிறக்கும் குழந்தைக்கு பக்கவாதம், ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் மூளையில் நீர் கோர்த்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நரம்பியல் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இதையடுத்து, இந்த மாதம் 12-ஆம் தேதி, 6 மணி நேரம் நீடித்த பிரம்மாண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த அறுவை சிகிச்சைக்காக 5 வாரங்களுக்கும் மேலாக பல்துறை மருத்துவர்கள் தீவிரமாக திட்டமிட்டனர். விரிவான கரு படமெடுத்தல், மயக்க மருந்து தயாரிப்பு, அறுவை சிகிச்சை ஒத்திகை என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தசூழலில் புதுதில்லி எய்ம்ஸ் நரம்பியல் மையத்தில், உயர்நிலை நுண்ணோக்கி மற்றும் தொடர்ச்சியான மீயொலி பரிசோதனை உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், தாய்-சேய் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை, மயக்கவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கதிரியக்க நோயறிதல் மற்றும் பச்சிளங்குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதில் பங்கேற்றனர். தற்போது தாயும் கருவும் நலமாக உள்ளனர்.
கர்ப்பத்தின் மீதமுள்ள காலம், பிரசவம் மற்றும் பிறந்த பிறகும் தாயும் சேயும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.மேலும், இந்திய அரசின் ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (JSSK) திட்டத்தின் கீழ் இந்த உயரிய சிகிச்சை குடும்பத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், "கரு அறுவை சிகிச்சை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சில கர்ப்பங்களுக்கு மட்டுமே செய்யப்படும் சிகிச்சை. இது நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதற்கான மாற்று அல்ல" என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது.
செய்தியாளர் - ராஜிவ்