கைது நடவடிக்கை X
இந்தியா

அரபிக் கடல் | ரூ. 3000 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. இந்திய கடலோர காவல்படை அதிரடி!!

அரபிக்கடலில் ரூ. 3,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தது இந்திய கடலோரக் காவல்படை; பாகிஸ்தானியர் 5 பேர் கைது.

Premkumar S

லட்சத்தீவுகளுக்கு மேற்கே, அரபிக்கடலில் சந்தேகத்திற்கிடமான ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று செல்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடல் மற்றும் வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டனர்.

கைது நடவடிக்கை

அதன்படி, செப்டம்பர் 25-ஆம் தேதி அந்தப் படகை பின்தொடர்ந்து சென்று அதிகாரிகள் மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, சுமார் 526 கிலோ எடையிலான உயர்தர போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. மேலும், படகில் இருந்த 5 பாகிஸ்தான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக, போதைப்பொருட்கள் மற்றும் படகு உள்ளிட்டவை பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, கடல் வழியாக நடைபெறும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.