குஜராத் மேற்கு கடற்பகுதியில் சரக்கு கப்பலில் கடத்தப்பட்ட 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதியில் சிலரது செல்போன்களை இடைமறித்துக் கேட்டபோது, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் உளவுத்துறைக்குக் கிடைத்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்பேரில், சரக்குக் கப்பலை சோதனை செய்த கடலோர காவல்படையினர், ஆயிரத்து 500 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
சந்தேகத்துக்குரிய 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரத்தில் இந்தியர்களின் தொடர்பு குறித்து கடலோரக் காவல்படை, உளவுத்துறை, காவல்துறை, சுங்கத்துறை, கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.