இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்துள்ளார், அதனால் அவர்களை வெல்வது கடினம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாசர் ஹுசைன் இதை தெரிவித்துள்ளார்.
“ஆஸ்திரேலிய மண்ணில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியாதான் 2 - 1 என்ற கணக்கில் அந்த தொடரை வென்றது. கோலி இல்லை, அனுபவ வீரர்களுக்கு தொடர் காயம் என பல தடைகள் வந்த போதும் இந்தியா அதில் வென்று காட்டியது. இந்தியா ஒரு வலுவான அணி. அவர்களை அதன் சொந்த மண்ணில் வெல்வது கடினம். இதற்கெல்லாம் கரணம் கோலிதான். அவர் இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்துள்ளார். இந்த 4 போட்டிகளும் மிகவும் சவாலானதாக இங்கிலாந்துக்கு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையுடன் இந்தியாவிற்கு வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பார்முக்கு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.