இந்தியா

'கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பு ஏன்?' - இந்தியன் வங்கிக்கு நோட்டீஸ்

JustinDurai

புதிய ஆட்சேர்ப்பு விதிகளை திரும்பப் பெறக் கோரி இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல்நலத் தகுதி குறித்து வெளியிட்டிருந்த வழிகாட்டல்கள் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அந்த வழிகாட்டுதலில், மருத்துவப் பரிசோதனையின்போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தைக் கடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக்காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாகத் தகுதியற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து 6 வாரங்கள் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல்நலத் தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல்நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்' என இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியன் வங்கியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பாலின பாரபட்சத்தோடு உருவாக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இச்சூழலில், புதிய ஆட்சேர்ப்பு விதிகளை திரும்பப் பெறக் கோரி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்தியன் வங்கிக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில் இந்தியன் வங்கியின் வழிகாட்டல்கள் பாகுபாடு கொண்டது மற்றும் சட்டவிரோதமானது என்றும் இது 'சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020'இன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு நலனுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எதனடிப்படையில் உருவாக்கப்பட்டிகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .

இதையும் படிக்கலாம்: ஒற்றை அம்மாக்களும் தந்தையர் தினமும்... பேசப்பட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்!