ஆபரேசஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விடுமுறையில் இருக்கும் வீரர்களுக்கும் உடனடியாக முகாமிற்கு திரும்பவும், பயிற்சியில் இருக்கும் வீரர்களும் பணிக்கு திரும்பவும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர், அசாம் ஆகிய பகுதிகளில் இருக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினரும் காஷ்மீர், பஞ்சாப் எல்லைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானின் அத்துமீறலை தடுப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், உயர்மட்ட அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவசர காலத்தை கருத்தில் கொண்டு ராணுவ சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, ராணுவ தளபதிகளுக்கான அதிகாரத்தை அதிகரிக்கவும் ஆணை பிற்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி செக்டார், பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில், சில வீடுகள், குடியிருப்புகள், வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், அத்துமீறி நுழையமுயன்றபோது, பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பிற்கும் இடையே நடந்த சண்டையில், பாகிஸ்தானின் தாந்தர் சாவடி தகர்க்கப்பட்டுள்ளதாகவும், 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக வீடியோவையும், எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய ராணுவம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்தால் பதில் அளிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.