பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட சிக் சாவர் ரக துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இன்சாஸ் ரக துப்பாக்கிகள் தான், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவிடம் இருந்து சிக் சாவர் சிக்716 ரக துப்பாக்கிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் படி அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடம் 72 ஆயிரத்து 400 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. முதல்கட்டமாக 10 ஆயிரம் துப்பாகிகள் இந்தியா வந்துள்ளன.
இவை அனைத்தும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்குள் எஞ்சிய துப்பாக்கிகளும் இந்தியா வந்தடையும் என தெரிகிறது. இதில் 66 ஆயிரம் துப்பாக்கிகள் ராணுவத்திற்கும், 2 ஆயிரம் துப்பாக்கிகள் கடற்படைக்கும், 4 ஆயிரம் துப்பாக்கிகள் விமானப்படைக்கும் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஹாங்காங், மெக்சிகோ, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவும் இந்த ரக துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. அதிநவீன முறையில் தயாரிக்கப்படும் இந்த துப்பாக்கி ராணுவத்திற்கு மேலும் வலுவூட்டும் என சொல்லப்படுகிறது.