ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கினர்.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை, நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை மற்ற மதத்தினருக்கு பரிமாறி வாழ்த்துக்களை பெறுகின்றனர். நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சகோதரத்துவத்தை போற்றும் இந்திய பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எல்லையில் இனிப்புகளை வழங்கினர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்திய வீரர்கள் சண்டை என்று வந்தால் வீரத்துடன் போரிடும் பழக்கம் கொண்டிருந்தாலும், அன்பை பரிமாறிக்கொள்வதிலும் சிறந்து விளங்குகின்றனர்.