இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..!

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறன் பெண்.. இங்கிலாந்தில் முனைவர் பட்டம்..!

Rasus

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை அருணிமா சின்ஹாவிற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவம் செய்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட். இந்த சிகரத்தில் ஏறுவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் ஒன்றும் கிடையாது. உடல் திடம் இருப்பவர்கள் கூட சற்று யோசிப்பார்கள். ஆனால் மாற்றுத் திறனாளி இந்திய வீராங்கனையான அருணிமா சின்ஹா முதல் முறையாக கடந்த 2013-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். உலகில் முதல்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மாற்றுத் திறனாளி வீராங்கனை இவரே.

மன உறுதியால் சின்ஹா எவரெஸ்ட் ஏறியிருந்தாலும் அவர் பிறப்பிலே ஒன்றும் மாற்றுத் திறனாளி கிடையாது. தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வீராங்கனையான இவர் ரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். கொள்ளையனை எதிர்த்து நின்றபோது அவருக்கு இந்த துக்க சம்பவம் நேரிட்டது. ஆனால் அதன்பின்பும் அவர் வீட்டிலே இருந்துவிடவில்லை. பல்வேறு சாதனைகளை செய்ய துவங்கினார். அதில் ஒன்றுதான் எவரெஸ்ட் சிகரம் ஏறியது. அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மிகப் பெரிய மலைகளையும் ஏறி சாதனை படைத்துள்ளார் சின்ஹா.

இவரின் சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவம் செய்தது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று அருணிமா சின்ஹாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

30 வயதான சின்ஹா கௌரவ பட்டம் வாங்கியதால் மகிழ்ந்து அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விருது இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறது. அதாவது நீங்கள் கடுமையாக போராடி உங்களது இலக்கை அடையும்பட்சத்தில் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.