இந்தியா

4,500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் - இந்தியாவை காக்க களமிறங்கிய தொழில்முனைவர் கிதிகா!

4,500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் - இந்தியாவை காக்க களமிறங்கிய தொழில்முனைவர் கிதிகா!

நிவேதா ஜெகராஜா

கடுமையான கொரோனா சூழலில் சிக்கியிருக்கும் இந்தியாவுக்கு தனது சொந்த முயற்சியால் பெரிய உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் இந்திய-அமெரிக்க தொழில்முனைவர் கிதிகா ஸ்ரீவாஸ்தவா என்பவர். அது தொடர்பாக விரிவாக பார்ப்போம்!

கொரோனா சூழலில் இந்தியா அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அதேபோல் பல தனிநபர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், சில இந்திய-அமெரிக்க வணிகத் தலைவர்கள் இந்தியாவுக்கு உதவ கைகோர்த்துள்ளனர். அவர்களில் போஸ்டனை தளமாகக் கொண்ட இந்திய-அமெரிக்க தொழில்முனைவர் கிதிகா ஸ்ரீவாஸ்தவா முக்கியமானவர். இவர் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலையை கருத்தில் கொண்டு 600,000 டாலர்களை இந்தியாவுக்கு வழங்கினார். அதுமட்டுமின்றி, மருந்து பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டு அவை வரும் 8ம் தேதிக்கு இந்தியா வரவிருக்கிறது.

இந்த முயற்சியை மற்ற இந்திய-அமெரிக்க தொழில்முனைவர்களான நரேஷ் ராமராஜன், தேஷ் மற்றும் ஜெய்ஸ்ரீ தேஷ்பாண்டே, பிரசாந்த் மற்றும் அனுராதா பாலகூர்த்தி ஆகியோருடன் இணைந்து செய்துள்ளார். இதில் ஸ்ரீவாஸ்தவா மற்றும் ராம்ரஞ்சன் ஆகியோர் மட்டும் இணைந்து 4,500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தங்களின் சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்துள்ளனர். இவற்றில் சில செறிவூட்டிகள் ஏற்கனவே இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், மீதமுள்ளவை இந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டரின் மிகப்பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருக்கிறது.

கிதிகா ஸ்ரீவாஸ்தவா யார்?

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர் ஸ்ரீவாஸ்தவா. இதே ஜாம்ஷெட்பூரில் உள்ள லயோலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் எம்ஐடியில் சேர்ந்த எம்பிஏ பட்டம் பெற்றார். மேலும் பிரபல நவ்யா நெட்வொர்க்கின் நிறுவனர்களில் ஒருவர் இந்த ஸ்ரீவாஸ்தவா. இந்த நிறுவனத்தை நரேஷ் ராமராஜனுடன் இணைந்து நிறுவினார். ஸ்ரீவாஸ்தவா 11 ஆண்டுகளுக்கும் மேலாக நவ்யா நெட்வொர்க்கை நடத்தி வருகிறார், இது பெங்களூரை தளமாகக் கொண்ட ஒரு மருத்துவ தகவல் நிறுவனமாகும், இது புற்றுநோய் நோயாளிகளுக்காக முக்கியமான சிகிச்சை முடிவுகளை எடுக்க உதவுகிறது.

2007 ஆம் ஆண்டில் தனது ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவர் சிகிச்சை எடுக்க படும் அவஸ்தைகளை கண்டு, இதுபோன்று மற்றவர்களும் அவஸ்தைப்பட கூடாது என எண்ணி, மற்றவர்களுக்கு உதவியாக நவ்யா நெட்வொர்க்கை தொடங்கினார். தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.