அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) இறக்குமதி செய்வதற்கான முதல் கட்டமைக்கப்பட்ட, நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்க எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் நீண்டகால விநியோக ஒப்பந்தங்களுக்கு வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள தகவலில், எல்பிஜி இறக்குமதி தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றான இந்தியா, முதல் முறையாக அமெரிக்காவுடனான ஒரு கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் எல்பிஜி இறக்குமதிக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் , 2026 ஒப்பந்த ஆண்டுக்கான சுமார் 2.2 MTPA எல்பிஜி-யை (இந்தியாவின் மொத்த ஆண்டு இறக்குமதியில் கிட்டத்தட்ட 10%) அமெரிக்க வளைகுடா கடற்கரையில் இருந்து இறக்குமதி செய்ய ஒரு ஓராண்டு கால ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன.
இந்திய மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்யும் முயற்சியில், இந்தியா தனது எல்பிஜி ஆதாரங்களை பல்வகைப்படுத்தி வருகிறது. இந்த கொள்முதல் ஒப்பந்தம், எல்பிஜி வாங்குதலுக்கான மவுண்ட் பெல்வியூ விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.IndianOilcl, BPCLimited, மற்றும் HPCL நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அமெரிக்காவுக்குச் சென்று, கடந்த சில மாதங்களாகப் பெரிய அமெரிக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் தலைமையின் கீழ், இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் எல்பிஜி-யை இந்தியப் பெண்களுக்கு வழங்கி வருகின்றன.கடந்த ஆண்டு, சர்வதேச விலைகள் 60%க்கும் அதிகமாக உயர்ந்தபோதும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு எல்பிஜி சிலிண்டர் ₹500-550 என்ற விலையிலேயே கிடைப்பதை உறுதி செய்தார்.ஒரு சிலிண்டரின் உண்மையான விலை ₹1100-க்கும் அதிகமாக இருந்த நிலையில், சர்வதேச விலை உயர்வின் சுமை இந்தியப் பெண்களுக்கு ஏற்படாமல் இருக்க, இந்திய அரசு கடந்த ஆண்டு மட்டும் ₹40,000 கோடிக்கும் அதிகமான தொகையை மானியமாகச் செலவிட்டது எம குறிப்பிட்டள்ளார்.