சிவ நாடார் pt web
இந்தியா

2026ம் ஆண்டிற்கான பெரிய நன்கொடையாளர்கள் யார் யார்? முதலிடத்தில் இருக்கும் தமிழர்!

இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளராக சிவ நாடார் முதலிடம்: நன்கொடையை இருமடங்காக்கிய அதானி; அம்பானியின் பங்களிப்பு 1% சரிவு!

PT WEB

2026-ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளர்கள் பட்டியலில் எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஹுருன் இந்தியா மற்றும் எடல்கிவ் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் முக்கிய விவரங்கள்:

2025-26 நிதியாண்டில் சமூகப் பணிகளுக்காக ₹2,593 கோடி (நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹7.1 கோடி) நன்கொடை அளித்து சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.

சிவ

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டை விட 127% அதிகமாக ₹877 கோடி நன்கொடை வழங்கி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

பஜாஜ் குடும்பத்தினர் 42% உயர்வுடன் ₹632 கோடி வழங்கி மூன்றாவது இடத்தையும், முகேஷ் அம்பானி 1% குறைந்து ₹620 கோடி வழங்கி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சைரஸ் பூனாவாலா மற்றும் ஆதார் பூனாவாலா ஆகியோர் தங்களது நன்கொடையை 94% உயர்த்தி ₹336 கோடியாகவும், சுதிர் மேத்தா மற்றும் சமீர் மேத்தா 77% உயர்த்தி ₹334 கோடியாகவும் வழங்கியுள்ளனர். நந்தன் நிலேகனி, ரோகிணி நிலேகனி, நாராயண மூர்த்தி உள்ளிட்ட 'இன்ஃபோசிஸ் குடும்பத்தினர்' ஒட்டுமொத்தமாக ₹920 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

நன்கொடை விவரங்களும் துறைகளும்:

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 219 கொடையாளர்களும் இணைந்து 2025-26 நிதியாண்டில் மொத்தம் ₹11,554 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இது முந்தைய ஆண்டை (₹10,380 கோடி) விட 11% அதிகமாகும்.

இதில் 19 பேர் ₹100 கோடிக்கு மேலும், 32 பேர் ₹50 கோடிக்கு மேலும், 80 பேர் ₹20 கோடிக்கு மேலும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

மொத்த நன்கொடையில் அதிகபட்சமாக கல்வித் துறைக்கு ₹4,188 கோடி (36%) வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாகச் சுகாதாரத் துறைக்கு ₹1,768 கோடியும் (82% உயர்வு), கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பணிகளுக்கு ₹1,377 கோடியும் (இதில் சிவ நாடார் குடும்பத்தின் பங்களிப்பு மட்டும் ₹1,220 கோடி) வழங்கப்பட்டுள்ளது.