இணையதளத்தில் வீடியோக்களை அதிக நேரம் பார்ப்பதில் அமெரிக்கர்களைவிட இந்தியர்கள் முன்னிலை பெற உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை அதிகரித்தது முதல் இணையதள பயன்பாடும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் இணைதளத்தில் வீடியோக்கள் பார்ப்பது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி அதிக நேரம் இணையதளத்தில் வீடியோக்களை பார்ப்பவர்கள் பட்டியலில் அமெரிக்கர்களைவிட இந்தியர்கள் இன்னும் சில மாதங்களில் முன்னிலை பெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய மக்கள் டிஜிட்டல் தளத்தில் செய்திகளை வீடியோக்களாக அதிகளவில் பார்த்து வருவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன் யுடியூப், டிக்டாக், ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் இந்தியர்கள் அதிக நேரம் செலவிடுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டு சராசரியாக இந்தியர்கள் இணையதளங்களில் ஒருநாளைக்கு சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்களை செலுவிட்டு வந்தனர். இது அடுத்த ஆண்டில் ஒருநாளைக்கு 2 மணி நேரம் 21 நிமிடங்களாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியர்கள் அதிகளவில் இணையதளத்தில் நேரத்தை செலவிடுவதற்கு எளிதில் கிடைக்கும் 4ஜி இணைய சேவையே காரணம் என்று இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் உலகளவில் இணையதள டேட்டா சேவை அதிகமாக பயன்படுத்துவது இந்தியர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது. இணையதளத்தில் வீடியோக்கள் பார்ப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் யுடியூப்பில் தான் வீடியோக்களை பார்க்கின்றனர் என்ற தகவலும் ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.