75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பது உலக நாடுகளின் முன்பு பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்தார். பயங்கரவாதமும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களும் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார். அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, இந்தியாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறவிருந்த நிலையில், 75-ஆவது சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், அதை 2022-ஆம் ஆண்டுக்கு மாற்றும்படி இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாடு, ஆண்டுதோறும் அந்தந்த உறுப்பு நாடுகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.