FOOD WASTE பண்ணாதீங்க என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். ஆனால், உணவை வீணடிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்" என்று கொந்தளித்த கவிஞன் பிறந்த தேசம் இது. ஆனால், பசித்த வயிறுகள் பல்லாயிரம் இருக்க, உணவு வீணடிப்பும் பெருமளவு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருங்கிணைந்த தேசிய மேம்பாட்டுத்திட்ட அமைப்பின் ஆய்வின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் 40% குப்பைகளில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களில் உணவு வீணடிப்பு என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் வீணடிக்கப்படும் உணவின் அளவு என்பது ஒட்டு மொத்த இங்கிலாந்து நாட்டின் உணவு அளவுக்கு சமமானது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாடே சாப்பிடக்கூடிய அளவு உணவு வீணடிக்கப்படுவது அதிர்ச்சி தகவலாகவே உள்ளது. குறிப்பாக சரியான பராமரிப்பு இல்லாததால் ஆண்டு தோறும் 21 மில்லியன் டன் கோதுமை இந்தியாவில் வீணாகிறது என்றும், உணவு வீணடிப்பால் அரசுக்கு ஆண்டு தோறும் 96 ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
உணவு வீணடிக்கப்படுவதால் 300 மில்லியன் பேரல் எண்ணெய் காரணமே இல்லாமல் வீணாகிறது என்றும் கூறும் ஒருங்கிணைந்த தேசிய மேம்பாட்டுத்திட்ட அமைப்பு, உணவு வீணடித்தல் என்பது தண்ணீர், இயற்கை, சமூக சீரழிவுகளுக்கும் வழி வகுக்கும் என எச்சரிக்கிறது.