gautam gambhir x page
இந்தியா

”மறந்துவிடுவீர்கள்” - தோல்வி குறித்து கேள்வி.. காட்டமாக பேசிய காம்பீர்.. காரசாரமாக மாறிய ப்ரஸ் மீட்!

கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழப்பது இது, இரண்டாவது முறையாகும். இதன்மூலம், சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை காம்பீர் பெற்றுள்ளார்.

Prakash J

கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழப்பது இது, இரண்டாவது முறையாகும். இதன்மூலம், சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை காம்பீர் பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு இந்திய அணி தொடரை இழந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் தொடரை இழந்துள்ளது. அதுவும் சொந்த மண்ணிலேயே தொடரை இழப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. குறிப்பாக, கவுதம் காம்பீர் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழப்பது இது, இரண்டாவது முறையாகும். இதன்மூலம், சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை காம்பீர் பெற்றுள்ளார். இதனால் அவர்மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.

india

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின்போதே இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், அணி குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்தது. அஸ்வின் தொடரின் பாதியில் ஓய்வுபெற்றார். அதன்பிறகு, மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றனர். அப்போதே முதலே கவுதம் காம்பீர் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. வீரர்களை அவர் இடம் மாற்றி இறக்குவதும் பேசுபொருளாகி வருகிறது. இதனால் அவர் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியளிக்க தகுதியில்லாதவர் எனவும், அவர் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விரும்பிய பிட்சைக் கேட்டு வாங்கி, அதில் இந்திய வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில், ’அங்கே என்ன பிசாசா இருக்கிறது’ எனக் கேள்வி எழுப்பியவர் கவுதம் காம்பீர். இப்போதும், அதாவது 2வது போட்டியின் தோல்விக்குப் பிறகும் அவர், வீரர்கள்மீதே விமர்சனத்தை வைத்துள்ளார். தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், ”டெஸ்ட் பணிக்கு கம்பீர் இன்னும் சரியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், “அதை முடிவுசெய்வது பிசிசிஐதான்” என்ற அவர், தனது வெற்றிகளைப் புறக்கணித்து தோல்விகளை மட்டுமே விமர்சித்த ஊடகங்களைக் கடுமையாக விமர்சித்தார். “இங்கிலாந்தில் இளம் அணியுடன் வெற்றி பெற்ற அதே நபர் நான். நீங்கள் மிக விரைவில் மறந்துவிடுவீர்கள். நிறைய பேர் நியூசிலாந்து பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்ற அதே நபர் நான். இது அனுபவம் குறைந்த அணி. நான் முன்பே சொன்னேன்: அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் வெற்றியைத் திருப்ப முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கவுதம் காம்பீர்

சில அணிகளில், டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்களும் பயிற்சியாளர்களும் தனித்தனியாக நியமிக்கப்படுவதைப் போன்று இந்திய அணிக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் குரலாக இருக்கிறது.