சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக திபெத்தின் புத்த மதத் தலைவரான 14வது தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனிடையே தலாய் லாமா வருகிற 6-ஆம் தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”தனது மறுபிறவியை 'காடன் போட்ராங்' அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும். தனக்குப் பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை” என தெரிவித்திருந்தார்.
ஆனால், தலாய் லாமாவின் இந்த அறிவிப்பை சீனா நிராகரித்தது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமாவின் மறுபிறவியை அங்கீகரிப்பதில், மத மரபுகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு அங்கீகாரம், 'தங்க கலசம்' செயல்முறை மற்றும் மத்திய அரசின் (சீனா) ஒப்புதல் ஆகியவற்றின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”தலாய் லாமாவின் முடிவு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே முழுமையாக உள்ளது. இது முற்றிலும் மத நிகழ்வு” எனக் குறிப்பிட்டுள்ளார்.