இந்தியா

ஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு!

ஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு!

webteam

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே யானைகளுக்கான முதல் மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

உலகில், யானைகளுக்கான முதல் சிறப்பு மருத்துவமனை தாய்லாந்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் யானைகளுக்கு மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் மதுரா அருகில் உள்ள சுர்முரா கிராமத்தில் நவீன மருத்துவ வசதிகளோடு கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதில், டிஜிட்டல் எக்ஸ்ரே உட்பட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானைகளை தூக்கிச் செல்வதற்கான கருவி, டிஜிட்டல் எடை இயந்திரம், நீண்ட நாட்களுக்கு தேவையான சிசிச்சையை மேற்கொள்வதற்கான சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காகவும் யானைகளின் பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் பாதுகாப்பான கண்காணிப்பு தளமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனையை ஆக்ரா டிவிஷனல் ஆணையாளர் அனில்குமார் திறந்து
வைத்தார்.

(தாய்லாந்து மருத்துவமனையில் யானைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழு)

’இந்தியாவில் நூற்றுக்கணக்கான யானைகள், பார்வை சரியில்லாமலும் நடக்க முடியாமலும் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருக்கின்றன. அவற்றுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் இதுபோன்ற மருத்துவ மனையை தொடங்க, இது முன் மாதிரியாக இருக்கும்’ என்று யானைகள் பராமரிப்பு இயக்குனர் பைஜூ ராஜ் தெரிவித்துள்ளார்.