இந்தியா

லக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு

rajakannan

லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான நாட்டின் முதல் கார்பரேட் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். முதல் நாளான இன்று இந்த ரயிலில் 389 பயணிகள் பயணம் செய்தனர். 

இந்த ரயில் லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு நாள்தோறும் கிளம்பி மதியம் 12.25 மணியளவில் புதுடெல்லியை சென்றடையும். மீண்டும் புதுடெல்லியில் இருந்து மாலை 3.35 மணியளவில் கிளம்பி இரவு 10.05 மணியளவில் லக்னோ வந்தடையும். செவ்வாய்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள ரயில் கான்பூர், காஸியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோ முதல் டெல்லி வரை பயண நேரம் 6 மணி, 15 நிமிடங்கள்தான். 

முன்னதாக, 500 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் ரயில்கள் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. டெல்லி - லக்னோ, மும்பை - ஷீரடி, சென்னை - பெங்களூரு,  திருவனந்தபுரம் - கண்ணுர், மும்பை- அகமதாபாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் முயற்சியாக தனியார் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.