இந்தியா

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா; 514 பேர் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,18,43,446 அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட சற்று அதிகமாகும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,70,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் 347 பேர் என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 150-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,09,872 என அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 173.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 41,54,476 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,51,677 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 30,615 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 2.45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.